பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘பொய்’

பொய்களின் தேசமடா…

வாய்மையே (பல சமயம்) வெல்லும்

மலை ஏறி இறங்கினர் ஐந்து இளைஞர்கள்; விடாத மழையினால் ஒதுங்க ஒரு குடிசையை அணுகினர். “இந்த மழை இரவெல்லாம் தீராது-இன்றிரவு இங்கே தங்கி விடிந்ததும் செல்லுங்கள்”என்றார் அந்த குடிசைக் கிழவன்.

தேநீர் தந்து உபசரித்தவள் கிழவனாரின் பேத்தி; வஞ்சக நிழல்படியாத பிஞ்சு; பூமியின் மீதொரு புதையலாய் அவள் அழகு.

பரணின் மீது படுக்கச் சொல்லி அவர்களுக்கு ஒரு இரவுக்கான ஆதரவு தருகிறது அந்த குடிசை.

அடர்ந்த மழை ஓய்ந்து , விடிந்ததும் விடை பெறுகின்றனர் அந்த ஐவர் குழு.

கதவின் பின்னால் கண்ணீரோடு அந்தப் பேதை; கண்கள் இரண்டிலும் ஒரே கேள்வி;

“நேற்றிரவு என் பெண்மையை தட்டுத் தடுமாறி, திருடித் திறந்தவன் உங்களைவரில் யார்?’

கன்னத்தில் அறைகிறதல்லவா இந்த கன்னடச் சிறுகதையின் உள்ளுறையும் உண்மை ?

=                     =                 =                    =

இந்த உண்மையை- இந்த மாதிரி உண்மையைத்தான் நாம்

எத்தனை முறை மண்மூடி ஒழித்திருக்கிறோம்? நம்மில் எத்தனையோ பேர் அன்றாடம் தொழில் முறையில் உண்மை பேச முடியாமல் தவறி, பின் அந்த பொய்யினைக் காப்பாற்ற மேலும் மேலும் பொய் சொல்லி…பின்னர் இன்று என்ன பொய் சொல்லலாம் என திட்டமிடலிலேயே நாள் போய் விடுகிறது..

ஏன் பொய் சொல்ல நேரிடுகிறது?

–     சரியான கணக்கிடல் இல்லாமல், நாம் கொடுத்து விடுகிற உத்தரவாதங்களால் !

–     நமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த , நாம் சொல்லும் ’சீக்கிர’ நேரங்களால் !

–     ஏதோ ஞாபகத்தில் தலை ஆட்டி விடுவதால் !

–     ‘இப்ப சொல்லிடலாம், அப்புறம் பாத்துக்கலாம்’ எனும் அசட்டையால் !

மேற்சொன்ன ‘சாக்கு’களை சமாளிக்க நமக்கு தேவைப்படுகிற ஊன்றுகோலே ‘பொய்’.

பொய் –

இன்றைய டீசல் நாகரிகத்தின் நளின அடையாளம்;

அவசர வாழ்வின் அழிக்க முடியாத அங்கம்;

நாம் நடந்துவந்த தடத்தின் திசை காட்டி:

அப்டேட் பண்ணி, இன்னும் சிம்பிளாய் சொல்லனுமா?

நம் புத்திக் கணிணியின் சுட்டி ( அதாங்க – மௌஸ் )!

பொய்யே நம் உள்ளத்தில் உள்ளதை தெள்ளத் தெளிவாக சொல்லும் கண்ணாடி இல்லையா?

‘பொய்மையும் வாய்மை உடைத்து’ என்று வள்ளுவர் சொல்லியிருக்காரே ?

‘சே! நேத்தே சொல்ல நினைச்சேன்; மறந்துட்டேன்.

நாந்தான் ஆரம்பிக்கும்போதே சொன்னேனே!

அப்பவே சொல்ல நெனச்சேன் ; இயது இப்படித்தான் முடியும்னு ‘

இதெல்லாம் பொய்யில்லாம வேற என்னவாம் ?

ஆம். சில சமயங்களில் பொய் சொல்லாததால் நாம் அல்லல்களில் மாட்டிக்கொள்ள நேரிடுகிறது.

‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார் வள்ளுவர்.

நமது வணிகம் முழுதும் பொய்மயமாவதும் தவறு. பொய்யே இல்லாத வணிகமும் தவறு.

“சாயங்காலம் சீக்கிரமா வந்துடுங்க “ என்று சொன்ன மனைவியிடம் தலையாட்டி விட்டு, மாலை நண்பர் குழாமுடன் அளவளாவிவிட்டு  தாமதமாய் வீடு சென்றால் முறைக்கும் மனைவியிடம்,

“சாரி, திடீர்ன்னு ஒரு பார்ட்டி வந்துட்டார். என்ன செய்யறது ? ஆன்னலும் உன் ஞாபகமாவேதான் இருந்தேன்”

என்று ஒரு அவசர பிட் (பொய்தான்) அவிழ்த்து விடவில்லையென்றால் என்ன ஆகும்? இன்னும் சில நல்ல கணவன்மார்கள், “ அதுக்கு ஏன் கோவிச்சுக்கற ? ஆனா ஒண்ணுடி ! கோவத்திலயும்  நீ ரொம்ம்ம்ம்ப அழகு !” என்று சூப்பர் பிட் போடுவார்கள். எல்லாம் நல்லதுக்குதானே?

ஆகவே இதனால் யாவர்க்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எங்கே எவ்வளவு தேவையோ, அங்கே அவ்வளவு மட்டுமே உபயோகப்படுத்தும் வரை….

‘பொய் நல்லது”