பயணிகள் கவனிக்க…

Posts tagged ‘தமிழ்ப்படம்’

எச்சரிக்கை இது ‘தமிழ்ப் படம்’ விமர்சனம் அல்ல !

இதுதாங்கடா தமிழ்ப் படம்

மறுபடியும் விகடனுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

10.01.2010 இத்ழின் அட்டைக் கட்டுரை இப்படிச் சொல்லுகிறது.;

சினிமா ஹீரோக்கள் டம்மி பீஸா?

கொதிக்கும் கோடம்பாக்கம்

ஆம் ! ஏகப்பட்ட பிரச்சினைகளை கிளப்பிவிட்டிருகிறது ‘தமிழ்ப் படம்’.

என்ன ஆச்சு?

தமிழ் சினிமாவில் காலங்காலமாகப் புழங்கி வருகிற சகல அலப்பறைகளான

அம்மா சென்டி மென்ட்,

அப்பா சென்டி மென்ட்,

குடும்ப சென்டி மென்ட்,

ஹீரோ சென்டி மென்ட்

இன்னபிற சென்டி மென்ட் மற்றும் ஓட்டை ஒடைசல் பில்ட்-அப்புகளை குத்து மதிப்பாக அல்ல, கொத்துக் கொத்தாக- கோத்துவைத்து அல்ல அத்தனையும் சேர்த்துவைத்து கலாய்த்திருக்கிறார்கள்.

இந்த சிக்கன்குனியா,குளிர்காய்ச்சலில் உச்ச நட்சத்திரமும் தப்பவில்லை; உலக நாயகனும் ஒதுக்கப்படவில்லை ! ( நல்ல மனுஷன்தான். என்ன பண்றது? எல்லாரும் அவருக்கு பிரச்சினை கொடுக்காறாங்களே ! என்று டயலாக் வேறு?)

படத்தின் முதல் ஃபிரேமிலிருந்தே நக்கல் நையாண்டி ஆரம்பித்து விடுகிறது! ‘சோ’வென மழை கொட்ட-எதிர்பாராதவிதமாக ‘ஆண்’ குழந்தை பிறந்து விடுகிறது. கிராம வழக்கப்படி, எட்டுப்பட்டி நாட்டாண்மையின் தீர்ப்புப்படி ஆண் குழந்தை பிறந்தால் அதை உடனே கொன்றுவிட வேண்டும். ஏன்? அந்த மசக் காமெடியை வெள்ளித்திரையில் கண்டால்தான் டக்கராய் இருக்கும் மக்கா ! ( ஸாரி சிம்பு !)

தமிழ்நாட்டின் ஏதோ ஒரு ஊரில் இருந்த சின்னப் பழக்கத்தை தன் சினிமா மூலம் தமிழகம் முழுக்க பிரபலம் ஆக்கி, ‘அட,இப்படிக் கூட கொல்லலாமா?’(இப்படியும் கொல்லலாம்!) என ஐடியா கொடுத்த அந்த கிராம இயக்குனருக்கு…..என்னத்த சொல்ல? நல்ல வேலை அவரை ஒதுக்கியாச்சு !

வழக்கமா நம்ம இயக்குனர்கள், ‘நான் இந்தப் படத்திற்கான கருவை, மாஹாபாரதத்தில் எடுத்தேன்-இராமாயாணத்தில் எடுத்தேன, தினசரிப் பேப்பரில் பார்த்தது’ என புருடா விடுவார்கள். சரிய்யா! படத்தை ஒழுங்கா எடுத்தியா என்றால்…? (ஹலோ…ஹலோ…எங்க ஓடறீங்க ?)

‘பணமா? பாசமா?’ என்று படம் எடுப்பவர் தமிழ்நாட்டின் மீது கொண்ட பாசத்தினாலா படம் எடுக்கிறார்?

அடி தடி கூடாது என்று சொல்ல ஒரு படம் வரும். அதன் ஹீரோ கடைசி வரை ஒரே வெட்டு-குத்து பண்ணிவிட்டு, கடைசியில் போனாப் போகுதுன்னு ஒரே ஒரு சீனில் , ‘போங்கடா, போயி உங்க பசங்களை நல்லா படிக்க வைங்க, கத்தி-ரத்தம் வேண்டாம்’-னு சொல்லிட்டு ஜெயிலுக்கு (அப்பாடா!) போயிடுவார்.

நம் தமிழ் படத்தில் (அதாவது இது வரை வந்த தமிழ் படங்களில்) இப்படியாக சில,பல சென்டிமென்ட்களை நாம் காலங்காலமா கட்டிக் காத்து வருகிறோம். சில இயக்குனர்கள் இதிலிருந்து மீள முயற்சித்தாலும், அது முழுமையாக நடைபெறாமல் பார்த்துக் கொள்ள சிலர் நம்மில் இருக்கிறார்கள்.

(கமல் தனது ‘குணா’- மதிகெட்டான் சோலை என்று யோசித்து வைத்திருந்தாராம் – படத்திற்கு டைட்டில் வைத்த கதியை ஸாரி கதையை யூ-ட்யூபில் பேட்டியாகவே சன் டி.வி.க்கு கொடுத்துள்ளார்)

ஹாலிவுட்டில் இருந்து மேக்-அப் விஷயங்களை கற்றுக் கொள்ளலாம்.

திரைக்கதை அமைப்பது எப்படி என கற்றுக் கொள்ளலாம்.

ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் கூட்டி வரலாம்.

ஒளிப்பதிவு ரகசியங்கள் கற்கலாம்; லேடெஸ்ட் கேமரா கொண்டு வரலாம்.

ஆனால் அங்கே இருக்கிற ‘ஸ்பூஃப் வகை’ (மிகப் பிரபலமான படங்களையும் ஏன் நடிகர்களையும் நக்கலடிகிற பாணி . உலகம் முழுதும் ரசிக்கும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஜேம்ஸ் பாண்ட் ஏன் அமெரிக்க அதிபர் என்று யாருமே இந்தக் கிண்டலுக்கு தப்பியதில்லை. சம்பந்தப்பட்டவர்களும் சேர்ந்து ரசித்துக் கைதட்டுவது ஹாலிவுட் பக்குவம்! ) கதை அமைப்பு முறை இங்கே வரக் கூடாது.

ஏன்? இந்த தமிழ்ப்படம் நமது, தமிழ்ப்படங்களை பப்படம் செய்கிறது.கேனத்தனங்களை விட்டு விளாசுகிறது.

‘எத்தனை நாளைக்குத்தாண்ட இப்படியே இருப்பீங்க’ என கேள்வி கேட்கிறது. (எங்கப்பா எஸ்.வி.சேகர்?உங்க பெரியப்பா, பெரிய தம்பி, சி.எம்,பி.எம் எல்லாம் சம்பந்தம் இல்லாம ஞாபகம் வருதே ஸார்?)

இந்தப் படத்திற்கு 43 மார்க்(சரியாக ஞாபகமில்லை) கொடுத்திருக்கிற விகடன் தனது சிண்டு முடிகிற வேலையை, தமிழ்த் திரை சம்பந்தப் பட்ட இயக்குனர்கள்-நடிகர்கள் என பேட்டி எடுத்திருக்கிறது.இதில் தமாஷ் என்னவென்றால் யாருமே (இயக்குனர் சுரெஷ் கிருஷ்ணா தவிர) இதைத் தவறான பாணி என்று சொல்லவில்லை.

எப்படிச் சொல்லுவார்கள்?

அவர்களாக ஏதாவது குழு-மீட்டிங்-செயற்குழு என்று போட்டு ‘இந்தப் படம் எங்களை எல்லாம் காயப்படுத்துகிற மாதிரி இருக்கிறது. இந்த தவறான போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று விகடனாருக்கு பேட்டி தரவில்லை. சும்மா இருக்கிற சங்க ஊதிக் கெடுக்க நினைத்த ‘விகடன்’ எடுத்து சொந்தப்பேட்டி இது.

நடிகர் நடிகர்களை கிண்டல் பண்ணுகிற, ‘ ஜெயிக்கப் போவது யாரு?’, ‘கலக்கப் போவது யாரு?’நிகழ்ச்சிகளை எல்லாம் எந்தக் கண்க்கில் கொண்டு வருவது மிஸ்டர்.விகடன்? கதாசிரியர்களையும், இயக்குனர்களையும் மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?காமெடியை காமெடியாக எடுத்துக் கொள்ளத் தெரியாதவர்களால் ஒரு ‘ஜோக்’கிற்காய் சிறை சென்ற விகடனாருக்கே விகடனத்தனம் என்றால் என்னவென்று புரியாதபோது என்னத்தை சொல்றது.? ‘கற்பனை-லூசுப்பையன்’ என்கிற தலைப்பில் விகடனில் வருகிறதே ஒரு நையாண்டி படத் தொடர்? அது எந்த வகையில் சேர்த்தி?

அதில் A-Z எல்லோரையும் (சினிமா, அரசியல்,பொது வாழ்வு) போட்டுத் தாக்குகிறீர்களே!

பத்திரிக்கை, அரசியல் சினிமா ரெண்டையும் நக்கலடிக்கலாம். சினிமா, அரசியல் பொதுஜனம் ரெண்டையும் நக்கலடிக்கலாம். சினிமா, சினிமாவை நக்கலடிக்கக் கூடாதா?

தமிழக முதல்வரோட பேரன்… மத்திய அமைச்ச ரோட மகன்… அவர் மட்டும் தயாரிப்பாளரா இல்லாட்டி, தமிழ் சினிமாக்காரங்க இந்நேரம் சும்மாவா இருந்திருப்பாங்க. சேம்பர்ல மீட்டிங் கூட்டி படத்துக்கு, டைரக்டருக்கு, புரொடி யூஸருக்குனு மொத்தமா ரெட் கார்டு போட்டிருப்பாங்க!” என சில புள்ளிகள் கூடிப் பேசுவதாக தகவல் தந்துள்ள விகடனார் எந்த தைரியத்தில் பத்திரிக்கை நடத்துகிறார்? அப்போ , கையில் பத்திரிக்கை இருந்ததால் உங்களுக்கு எல்லாப் பவரும் இருப்பதாய் அர்த்தமா? எதை வேண்டுமானாலும் எழுதுவீங்களா? அதையே சினிமாக்காரன் யோசிக்கக் கூடாதா? என்ன கொடுமை ஸார் இது?

இம்மாதிரையான நையாண்டிப் படங்களுக்கு இதுதான் பட்ஜெட்

அட, அவ்வளவு வேண்டாம். பாடல் தேவையே இல்லாத

கதைகளில் கூட வியாபாரம், வெறும் பாரம் என்று ரெண்டு

பாடல்களையாவது புகுத்திவிடுகிற நமது தமிழ்ப்படங்களுக்கு

மத்தியில், கய்யா, முய்யா, கைய வையா என எதாவது பாடலை எழுதித் தொலைத்து நமது ரசனையை சோதிக்கிற இசை அமைப்பாளர்கள்,பாடலாசிரியர்களுக்கு உறைக்கிற மாதிரி வார்த்தையே இல்லாமல் ஒரு பாடலை ( ஓ..மஹசீயா..) யோசித்திருக்கிற இயக்குனரும்,புதிய இசை அமைப்பாளரும் நிச்சயம் பாராட்டத்தக்கவர்களே ! இப்படத்திற்காக மெனக்கெட்ட தயாரிப்பாளரும் போற்றப்பட வேண்டியவரே.

சினிமாப் பட்டி எனும் ஒரு ஊர், தங்கச்சி செண்டிமெண்ட்பட்டி,சீரியல்பட்டி……நல்ல கற்பனை.

இயக்குனரின் ஸ்பெசல் டச்சிற்கு,

கடைசியில் போடும் கார்டு- இவன் நடக்கும் பாதையில் கல்லும், முள்ளும் இருந்தாலும் இவன்நிற்க மாட்டான். ஏனெனில் நடப்பது சுகர்,பீபிக்கு நல்லது- ஒரு நல்ல உதாரணம்.

புத்திசாலிகளை பொழைக்க விடுங்கய்யா !